நண்பன் தங்கருக்கு...
சென்ற வார விகடன் இதழில், உங்கள் நேர்காணலைப் பார்த்தேன்.
ஒவ்வொருத்தருக்கும் எதிரி ஒருத்தன் உள்ளுக்குள்ளேயே இருப்பான். சிலருக்கு அவங்க நேர்மையே எதிரி! இன்னும் சிலருக்கு அவங்க திறமையே எதிரியாகும். ஆனா, உங்களுக்கு உங்க வாய்தான் எதிரி. என்னை நன்றி மறந்தவனாகச் சித்திரிச்சிருக்கீங்க. ஆனா, உண்மை என்ன தங்கர்?
‘பள்ளிக்கூடம்’ கதையை நீங்க என்னிடம் விவரிச்சப்போ, அது ‘அழகி’யையும் ‘ஆட்டோகிராஃப்’பையும் நினைவுபடுத்துதுன்னு சொன்னேன். இதில் நீங்களும் நானும் நடிச்சா, இவங்களுக்கு வேற வேலையே இல்லையான்னு மக்கள் நினைச்சிடுவாங்கன்னு மட்டும்-தான் சொன்னேன். வேறு நடிகர்கள் நடிச்சா, அது தெரியாதுன்னும் சொன்-னேன். ஆனா, பிடிவாதமா நின்னீங்க. இப்போ, அதை மறந்துட்டு என்னென்-னவோ பேசி இருக்கீங்க.
நீங்க நல்ல எழுத்தாளர். உங்க-ளோட ‘வெள்ளை மாடு’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ ரெண்டையும் படிச்சு உருகியிருக்கேன். நீங்க என்னோட ‘தேசிய கீதம்’ பார்த்துட்டு, ‘இப்படி-எல்லாம் எடுக்க முடியுமாய்யா?’னு நெருங்கி வந்தீங்க. அப்படி ஆரம்பிச் சது நம்ம நட்பு. ஆனா, நீங்க பேசக் கூடிய வார்த்தை-களுக்கும் வாழுற வாழ்க்கைக்கும் எவ்வளவு முரண்பாடு!
‘சொல்ல மறந்த கதை’ யில் என்னை ஒரு நடிகனா அறி-முகம் செய்தவர் நீங்கதான். நான் சம்பளமே வேண்டாம்னு சொன்னேன். ‘இல்லை சேரா, இது தொழில்!’னு 3 லட்சத்தை எனக்குக் கொடுத்துட்டு, 25 லட்சம் கொடுத்ததா தயாரிப்பாளரிடம் கணக்கு காட்டினவர் நீங்க. உங்களின் இந்த ‘அரிய’ குணத்தைக்கூட இதுவரைக்கும் நான் வெளியே சொன்னதில்லை, தங்கர்! இப்போ சொல்ல வெச்சதும் உங்கள் பேச்சுதான்.
இவ்வளவு அழகாக எழுதுகிற கலைஞன், எப்படி இத்தனை நேர்மையற்றவரா இருக்க முடியும்னு நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்கு தங்கர். வாழ்க்கையின் உயர்ந்த பட்ச நல்ல மனநிலையை எப்பதான் அடையப்போறீங்க?
‘சொல்ல மறந்த கதை’யில் என் நடிப்பைப் பார்த்துட்டு, பல தடவை கட்டிப்பிடிச்சுப் பாராட்டி அழுதிருக்கீங்க. ஆனா, அதே வேகத்தில் இன்னொரு நடிகரைப் பார்க்கப் போய், ‘சேரனுக்குப் பதில் நீங்க நடிச்சிருந்தா, அந்தப் படம் பிச்சிட்டுப் போயிருக்கும்’னு சிரிச்சிருக்கீங்க. முரண்பாடுகளின் மூட்டையாகிட்டீங்களே, ஏன் தங்கர்?
எந்த ஒரு கஷ்டமான கணத்திலும், உங்களுக்கு ஆதரவா நின்னிருக்கேன். குஷ்புவுக்கும் உங்களுக்கும் நடந்த சண்டையில் உங்கள் பக்கம் நின்னு, நடிகர் சங்கத்துக்கும் யூனியனுக்கும் அலைஞ்சிருக்கேன். ‘அழகி’யை ரிலீஸ் செய்ய முடியாம தவிச்-சப்போ, என் ஆபீஸ்ல கூடிப் பேசி பிரச்னையைச் சரி பண்ணி-யிருக்கோம். ஆனா, ‘ஒண்ணுக்குள்ள ஒண்ணு’ன்னு சொல்றவர், என்னோட ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ படங்கள் ரிலீஸ் செய்யக் கஷ்டப்பட்ட காலங்களில், ஆறுதலாக ஒரு வார்த்தை, போனிலாவது நீங்க பேசியது உண்டா?
எப்போ பார்த்தாலும் ‘தமிழனுக்கு நான்தான் அத்தாரிட்டி’ன்னு சொல்லிக்கிறீங்களே... மகேந்திரனின் ‘உதிரிப்பூக்க’ளும், பாரதிராஜா-வின் பல படங்களும் காட்டிய தமிழ் வாழ்க்கையை நீங்க இன்னும் காட்டவே இல்லை. முதலில், உங்க படங்களைச் ‘சுருட்டாம’ நல்லா எடுக்கிறவிதத்தைப் பழகுங்க. ‘பள்ளிக்கூடம்’ மிகச் சிறந்த கதை. ஆனா, கொடுத்த பணத்தைச் ‘சுருட்டாமல்’ இருந்திருந்தால், அது இன்னும் நல்ல படமா வந்திருக்கும். இப்போ ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தையாவது கெடுக்காமல் எடுங்க. அதுதான் உங்களை வேறு இடத்தில் கொண்டுபோய் வைக்கும்.
என்னை மட்டுமில்லை... விஜயகாந்த்தையும், சரத்குமாரையும் வம்புக்கு இழுத்திருக்கீங்க. திருமா அண்ணன் சினிமாவுக்கு வந்ததை எந்த அளவுக்கு வரவேற்கிறோமோ, அதே மாதிரி இவங்களும் அரசியலுக்கு வரட்டுமே! அவங்களை மக்கள் முடிவு பண்ணட்டும். உங்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தாங்க?
‘அழகி’யை அப்போ கொண்டாடியது, இப்போ நீங்க திட்டுற அதே டைரக்டர்கள்தான். அவங்களுக்குத் தெரிஞ்சதை அவங்க பண்றாங்க; நமக்குத் தெரிஞ்சதை நாம செய்றோம். அவரவர் திறமை, அவரவர் பாடு! மக்கள் புத்திசாலிகள். அவங்களுக்குத் திருப்தி இல்லைங்கிறதை ‘தென்றல்’, ‘மாயக்கண்ணாடி’ ரெண்டும் நிரூபிச்சுது. உங்களை வஸந்த்தும், விக்கிரமனும் பாராட்டியிருந்தா, அது அவங்க பெருந்தன்மை!
உங்களுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னால யோசிச்சேன். ஆனா, என்னால் அமைதியா இருக்க முடியலை. ஏன்னா, இது சுமத்தப்பட்ட அமைதி. நான் வேகமா நடக்கிறபோதெல்லாம், இப்படி ஏதாவது ஒரு கல் என் பெருவிரலைக் காயப்படுத்திட்டே இருக்கு. இருந்தாலும் நன்றி மறப்பவன் நான் அல்ல. இப்பவும் நல்ல கதை இருந்தா, சொல்லுங்க... நடிக்கிறேன். ஆனால் உங்களின் பேச்சு, நீங்க நல்ல நண்பர் இல்-லைன்னு காட்டிவிட்டது. உங்கள் பொய் முகத்தைக் காட்டிவிட்டு, நான் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்.
ஒன்றே ஒன்றுதான் தங்கர்... நம் படைப்பு-களைத்தான் தமிழர்கள் நேசிக்கிறார்கள். நாம் அதிகம் பேசுவதை அல்ல!
நன்றி: விகடன்